நீட் தேர்வு அச்சத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் தருமபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்தது. மாணவன் ஆதித்யாவின் உடல் செந்தில் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன்பரப்பு பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் நீட் தேர்வின் அச்சத்தாலும், மன உளைச்சல் காரணமாகவும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மோதிலால் இல்லத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவனின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல, என மாணவர்களுக்கு மன நல மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.