ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இரு தரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது.
அது தலிபான் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் நேரடி அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஊன்று கோலாக அமைந்துள்ளது. இருந்தாலும் கைதிகளை விடுதலை செய்யக்கூடிய விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவியதால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அது தடுப்பணையாக அமைந்தது. ஆனால் அந்தத் தடைகள் அனைத்தும் தற்போது நீங்கி, இரு தரப்பினருக்குமிடையில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் நீண்ட கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு சார்பாக 21 நபர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ கலந்து கொண்டுள்ளார்.