காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததால் வேலை செய்து கொண்டிருந்த 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அப்பகுதியில் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகச் சென்று தங்கத்தை வெட்டி எடுக்கின்றன. ஆனால் அந்த சுரங்கங்களில் முறையான பாதுகாப்பு கருவிகள் எதுவும் பயன்படுத்தப்படாததாலும் மற்றும் அரசு உரிமம் இல்லாமல் சில ரகங்கள் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வருவதாலும் சுரங்கங்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காங்கோவின் கிழக்கு மாகாணம் அருகே உள்ள கமிட்டுகா நகரில் கனடா நிறுவனம் ஒன்றிற்கு உரிமையான தங்க சுரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், சுரங்கப் பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அதனால் நேற்று முன்தினம் மாலை அந்த தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அனைவரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து உள்ளூரை சேர்ந்து கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிய 50 பேரை பிணமாக மீட்டனர். அந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் சுரங்கத்தின் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.