தந்தை ஸ்தானத்தில் கேட்டுக் கொள்கின்றேன் தற்கொலை தீர்வல்ல என பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்கள் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர்.
அரசியல் கட்சியினர் மாணவர் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல், நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்தனர். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில்தான் பாஜகவின் துணைத் தலைவர் துரைசாமி தமிழக பாஜக சார்பாக இரு கரங்களை கூப்பி கேட்டுக்கொள்வது தற்கொலை எதற்கும் தீர்வாகாது தந்தை ஸ்தானத்திலிருந்து கேட்டுக்கொள்கிறேன் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.