நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திரு மோகன்ராஜ் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வை எழுத முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு நீதி வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் திரு கண்ணன் மாநில மகளிரணித் தலைவர் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி திருமதி முத்துலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட்தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதா, விக்னேஷ், ஜோதி ஸ்ரீதுர்கா, ஆதித்யா ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மாணவர்கள் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் சுங்ககேட் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.