நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் விவகாரம் எதிரொலித்தது .
அதே போல நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை கொண்ட நிகழ்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. கொரோனா காரணமாக நீதிமன்றங்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகின்றது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதேபோல் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கூடாது என்பதை வலியுறுத்தியும், ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து தற்போது மேலும் 25 மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்! #BanNEET_SaveTNStudents
— Udhay (@Udhaystalin) September 14, 2020