குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால் வலிக்காக சென்ற பெண்ணை கொரோனா பரிசோதனை எடுக்காமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே ஈச்சன்விலை பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் கால் வலிக்காக தனது மகளுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். கால் வழியாக சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், உடனடியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அப்பெண்ணின் கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவு தெரிவித்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கும் அப்பெண்மணி தகவல் அளித்தார்.
ஆனால் அரசு பதிவேட்டில் கொரோனா பாதிப்பு என குறிப்பிடப்பட்டது. அந்தப் பெண்மணி கண்டிப்பாக மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தினார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.