சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 12 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அம்பலமாகியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைக்கப்பட்டு அசல் மற்றும் வட்டி செலுத்தப்படாத நகைகளை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதில் ஆளப்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் 440 கிராம் நகைகளை அடகு வைத்து 8 லட்சம் ரூபாயும், ராஜேஷ்வரன் என்பவர் 193 கிராம் நகைகளை அடகு வைத்து 4 லட்சம் ரூபாயும், கடன் பெற்றிருந்தனர்.
இந்த நகைகளை மதிப்பீடு செய்த போது இருவரும் கவரிங் நகைகளை கொடுத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2018 -ஆம் ஆண்டு இந்த நகைகளை மதிப்பீடு செய்த வங்கி நகை மதிப்பீட்டாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.