Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தவணைக் கட்ட செலுத்த தவறிய தம்பதி; தாறுமாறாக பேசிய ஊழியர்கள்..!!

விருதுநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தவணை செலுத்தாத  வீட்டின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் விருதுநகர் அய்யம்மாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 5 ஆண்டுகளாக மாதத் தவணையும் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இல்லாததால் கடந்த  மாதம் செந்தில்குமாரால் தவணை கட்ட முடியவில்லை.

இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் இரவு எட்டு மணிக்கு மேல் செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி தனியாக இருந்த சமயத்தில் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் வங்கிக்கு சென்று எதற்காக இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவணை தேதியான பத்தாம் தேதிக்கு வராமல் முன்கூட்டியே ஆறாம் தேதி இரவு 8 மணிக்கு மேல் மனைவி தனியாக இருக்கும் சமயத்தில் பணத்தை கேட்டது எதனால் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நிதி நிறுவன ஊழியர்கள் நாங்கள் கந்து வட்டிக்குத்தான் பணம் வழங்குகிறோம் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர்.

காவல்நிலையத்தில் இதுகுறித்து செந்தில்குமார் புகார் அளித்திருக்கிறார். தனியார் வங்கி ஊழியர்களின் ராஜகப் போக்கு  கடன் வாங்கியவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி  குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. கொரோனா காலத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் தவணை காலங்களில் நீட்டித்து உத்தரவிட்டு இருந்தாலும் இது போன்று தனியார் நிறுவனங்களின் அராஜகப் போக்கும் அரங்கேறி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

Categories

Tech |