குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொன்னால்லகரம். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக காலை மாலை என இருவேளையும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக காத்திருந்தனர். அச்சமயம் எப்போதும் போல் இல்லாமல் குடிநீர் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து யாரும் அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சோதனை மேற்கொண்டதில் பூச்சிக்கொல்லி மருந்து குடிநீரில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நீர்த்தேக்க தொட்டியில் இருந்த மொத்த குடிநீரும் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. குடிக்கும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து தனிநபர் விரோதத்தினாலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.