மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் அனுராதா. 45 வயதான அவர் டீ கடை வைத்து தொழில் நடத்தி வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. அதனால் 21ஆம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் ஏற்பட்ட மின்தடையால் போதுமான ஆக்சிஜன் கிடைக்கமால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் மின்தடையால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதனையடுத்து இவர்களது இறப்பிற்கு காரணம் மருத்துவமனையின் அலட்சியமே .எனவே அங்கு உள்ள மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.