காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலன் விஷ மாத்திரைகளை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை மேலூருக்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் தன்னுடன் தங்க வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு வந்து அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் பாண்டியராஜன் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க பாண்டியராஜன் சென்றுள்ளார். அங்கு திடீரென தான் கொண்டுவந்த மாத்திரைகளை சாப்பிட்ட பாண்டியராஜன், “எனது காதலியை என்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் இங்கேயே நான் தற்கொலை செய்து கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.
அதன்பிறகே அவர் சாப்பிட்டது எலி விஷ மாத்திரை என்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.