பள்ளி கட்டணம் உயர்த்தியதாக ஒன்பது பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை முதல் தவணையாக செலுத்த காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.இதுகுறித்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரித்தபோது தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்துள்ளதாக 111 புகார்கள் பெறப்பட்டு உள்ளது.
மேலும், அதில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும், 9 பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தையும் செலுத்தும்படி வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த 9 பள்ளிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிராக எந்த ஒரு புகாரும் எழவில்லை என சிபிஎஸ்இ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதாடியுள்ளார். இதனை அடுத்து, குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர் புகார் கொடுக்க தயங்குவார்கள் என்பதால் தனியாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அது பற்றிய விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் சிபிஎஸ்இக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த மின்னஞ்சல் மூலம் புகார்களை பெற்று அக்டோபர் 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.