பார்வைக் குறைபாட்டால் வேலை இழந்த அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பாறைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் புளியங்குடி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செல்வகுமாருக்கு திடீரென கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் 6 மாத காலமாக அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கப்படவில்லை. எனவே செல்வகுமாரின் குடும்பம் எந்த வருமானமும் இன்றி வறுமையில் வாடியுள்ளது.
இதனை நினைத்து மனமுடைந்து போன செல்வகுமார் கடந்த 19ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இழப்பை தாங்காத மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கதறியது பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது. கடந்த வருடம் செல்வகுமாரின் மகன் நவீன் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்துள்ளார்.
தற்போது தந்தையும் தற்கொலை செய்திருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்ட செல்வகுமாருக்கு வேறு ஏதேனும் மாற்றுப்பணி வழங்கி இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என சக ஊழியர்கள் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.