பேரறிவாளனக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்கக்கோரி அவரது தாயார் திருமதி. அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மகன் இருக்கும் புழல் சிறையில் 50 கைதிகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் உள்ளதால் கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் உள்ளதாகவும். எனவே அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்றும் திருமதி அற்புதம்மாள் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் திரு.என். கிருபாகரன் திரு. வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் கடந்த ஜனவரி மாதம் விடுப்பில் சென்றதால் சிறை விதிகளின்படி 2 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் சாதாரண விடுப்பு வழங்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள் பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்க உத்தரவிட்டனர். ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கும் படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.