விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான சிறப்பு துணை தேர்வு கடந்த 21ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான கணிதப் பாட தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கலில் ஒருவருக்கு தமிழ்வழிக் கல்விக் என குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள் வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால் தனக்கு ஆங்கில வழிக்கல்வி எனக் குறிப்பிடப்பட்ட விடைத்தாள் வழங்கும்படி தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அந்த மாணவர் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கண்காணிப்பாளர் மாணவரின் நுழைவு சீட்டை வாங்கி பார்த்தபோது பிறந்த ஆண்டு 1986 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாணவர் 34 வயது ஆனவர் போல் இல்லாமல் இருபது வயது மதிக்கத்தக்கவராக இருந்ததால் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வில்லை.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த மாணவர் புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை பகுதியில் சேர்ந்து கிஷோர் என்பது தெரியவந்தது. பொறியியல் மாணவரான இவர் தனது உறவினர் கார்த்திக் என்பவர் பெயரில் தனி தேர்வுக்கு விண்ணப்பித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் கிஷோரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.