தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் மேலும் 66 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனாா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 692 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 21 நாட்களுக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 89 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 683 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 470 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 642 பேருக்கும், சேலத்தில் 311 பேருக்கும், செங்கல்பட்டில் 299 பேருக்கும், கடலூரில் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.