Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் நடவேண்டும்..!!

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும், அவ்வாறு பாராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அது கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கத்தின் போது ஒரு லட்சத்து 78 ஆயிரம் மரங்களை தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டி உள்ளனர். இதற்கு பதிலாக 10 லட்சம் மரங்களை நட வேண்டும்.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை வெட்டிய மரங்களுக்காக புதிய மரக்கன்றுகளை நட தவறிவிட்டது எனவும், ஆகவே தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மரக்கன்றுகளை நடவும் அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய நெடுஞ்சாலை துறை தரப்பு வழக்கறிஞர் மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக வனத்துறையிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட படி  சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் சாலை  விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

Categories

Tech |