திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை 5ம் தேதி வந்த சரக்கு விமானம் ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய பார்சல் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தின் முன்னாள் ஊழியர் இளம்பெண் ஸ்வப்னாவுக்கு இந்த தங்க கடத்தலில் முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ அதிகாரிகள் சுவப்னாவை கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது தொடர் புலன் விசாரணைக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் என்.ஐ.ஏ. காவலில் இருக்கிறார். இந்நிலையில் சொன்னவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மாநில அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் முதலமைச்சரின் முன்னாள் செயலாளருமான எம். சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அவரிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜரான சிவசங்கரிடம் அதிகாரிகள் தங்க கடத்தல் தொடர்பாக துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிடைத்த தகவலை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக தற்போது என்.ஐ.ஏ. காவலில் உள்ள முக்கிய குற்றவாளி ஸ்வப்னாவும் அங்கு அழைத்து வரபட்டிருந்தார். இருவர் இடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்க கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களின் பதில்களை பதிவு செய்து கொண்டனர்.