மருத்துவப் படிப்பிற்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழகம் அரசு மற்றும் ஆதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான முடிவு எடுக்க மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்திய மருத்துவ கவுன்சல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தன.