அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்க மட்டும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியோடு ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு, அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பபட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் நலன் சார்ந்தும், நோய் தொற்று பரவிவரும் இந்த நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.