மாணவர்களின் வீட்டிற்கு அரசு பள்ளி ஆசிரியர் நேரடியாக சென்று பாடம் நடத்துவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஏனாதி கரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழரசன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூடுமானவரை படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி இருக்கும் இந்த மாணவர்களால் வசதியின்மையினால் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து ஆசிரியர் தமிழரசன் பத்தாம் வகுப்பு பயிலும் 37 மாணவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பாடம் நடத்துகிறார். அதோடு 6ஆம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை புதிதாய் சேர்ந்திருக்கும் 27 மாணவர்களின் வீட்டிற்கும் இவர் பாடம் நடத்த செல்கிறார். இதுகுறித்து தமிழரசன் கூறுகையில் “கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்ற காரணத்தினால் அவர்களிடம் செல்போன் வசதியும் இன்டர்நெட் வசதியும் இல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களது கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக நேரடியாக வீட்டிற்கு சென்று பாடம் நடத்தி வருகிறேன்” என கூறியுள்ளார்.