கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பெற்றோரும், நண்பர்களும் இனிப்புகள் கொடுத்து பாராட்டினர்.
நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துக்கொள்வது தவறு என்றும், உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றும் தேர்ச்சி பெற்ற பெண் ஐபிஎஸ் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் மங்கலநடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவியாளர் பிரேமச்சந்திரனின் மகளான பிரவீனா, சிறுவயது முதலே ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவோடு படித்துவந்தார்.
ஐந்து முறை UPSC தேர்வெழுதியதில் மூன்று முறை தோல்வியடைந்தார். நான்காவது முறையாக 2018ஆம் ஆண்டு IRTS தேர்ச்சி பெற்று லக்னோவில் பயிற்சி பெற்றுவந்த நிலையில், ஐந்தாவது முறையாக தேர்வு எழுதியதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐபிஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு பெற்றோர்களும் நண்பர்களும் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். போட்டிகளும் தேர்வுகளும் வாழ்க்கையின் முடிவல்ல என்றும், நீட்தேர்வு பயத்தில் தற்கொலை செய்துக் கொள்வது தவறு என்றும் தெரிவித்தார். விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதற்கு பிரவீணாவின் இந்த சாதனை மற்றவர்களுக்கு மிகச்சிறந்த உதாரணம் என்பது மறுப்பதற்கில்லை.