இந்தியாவில் கொரோனா – லாக்டவுன் காலத்தில் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளின் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள், பிரபலங்கள் சிலரை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை நீக்க அண்மையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று தொற்று இருந்ததும் அறுவை சிகிச்சைக்கு முன் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிரணாப் முகர்ஜி காலமானார்.
திரைப்பட இயக்குனர் நிஷிகாந்த் காமத். ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 4:24 மணிக்கு காலமானார். த்ரிஷ்யம், ஃபோர்ஸ், மாதாரி உள்ளிட்ட படங்களை இயக்கிய இந்த 50 வயது இயக்குநர், கடந்த 2 ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்துவந்த 90 வயதான இந்திய இசை மேதை பண்டிட் ஜஸ்ராஜ் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது 80 ஆண்டு கால இசை பயணத்தில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இவரது பாரம்பரிய மற்றும் அரை பாரம்பரிய குரலிசை நிகழ்ச்சிகள் ஆல்பங்களாகவும், திரைப்பட பின்னணி இசையாகவும் வெளியாகியுள்ளது.இந்தியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இசைப் பயிற்சியும் அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுஹான் தனது 73 ஆவது வயதில் காலமானார். உத்தர பிரதேச அரசில் கேபினட் அமைச்சராக பணியாற்றி வந்த சவுகான் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேத்தாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிரபல பாலிவுட் திரைப்பட நடன ஆசிரியர் சரோஜ் கான் நெஞ்சுவலி காரணமாக ஜூலை மூன்றாம் தேதி காலமானார். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர் ஜூன் 20ஆம் தேதி மும்பை குருநானக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக அவரது உடல்நிலை சீர்குலைந்த நிலையில் திடீரென காலமானார்.
பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வாஜித் கான் சிறுநீரக தொற்று காரணமாக ஜூன் ஒன்றாம் தேதி உயிரிழந்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானின் வாண்டட், தபாங், ஏக் தா டைகர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற சஜித்-வாஜித் இரட்டையர்களில் ஒருவர் தான் வாஜித் -கான். கொரோனா தொற்று பாதித்திருந்த வாஜித் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
‘சிர்ரு’ ‘சிங்கா’ அம்மா ஐ லவ் யூ உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அகால மரணம் அடைந்தது திரையுலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்திய திரைத் துறையின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான இர்பான் கான் ஏப்ரல் 29 ஆம் தேதி காலமானார். குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்பான் கான் ஏப்ரல் 28-ஆம் தேதி மும்பையிலுள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அண்மைக் காலத்தில் உலக சினிமா கண்ட சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.
பாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்ற நடிகருமான ரிஷி கபூர் ஏப்ரல் முப்பதாம் தேதி காலமானார். ரொமான்டிக் ஹீரோவாக புகழ்பெற்ற ரிஷி கபூர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறந்த நடிகராக மிளிர்ந்தார். ‘மேரா நாம் ஜோக்கர்’ முதல் ‘102 நாட் அவுட்’ ஆகிய படங்கள் வரை நம் நினைவில் நிற்க தகுந்த பல சிறப்பான படங்களை வழங்கி சென்றுள்ளார்.
பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் சிங் தனது 34வது வயதில் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். எம்எஸ் தோனி டி அண்ட்வேர்ட் ஸ்டோரி, கை போ சே, சிச்சோரெ, உள்ளிட்டவை இவரது படங்களில் குறிப்பிடத்தக்கவை. இவரது கடைசிப் படமான தில் பேச்சாரா ஜூலை 24 2020 அன்று பிரபல ஓட்டி தளத்தில் வெளியாகியது. இவரது இறப்பு இந்தியாவில் இன்று வரை மிகுந்த சோகமான ஒரு விஷயமாக ரசிகர்களிடையே பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்த இந்தியாவின் தலை சிறந்த பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ஆம் தேதி சென்னையில் காலமானார். எஸ்பிபி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் கொரோனா உறுதியானதை அடுத்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சென்னை ஏவிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செப்டம்பர் எட்டாம் தேதி நடந்த சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்த போதும் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25-ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டு எஸ்பிபி பிரிந்தார்.
நம்மை பல பிரச்சனைகளுக்கு ஆளாக்கிய இந்த கொரோனா – லாக்டவுன் காலகட்டத்தில், மேற்கொண்டு சோகத்தை ஏற்படுத்தும் விதமாக 14 முக்கிய ஆளுமைகள் நம்மை விட்டு பிரிந்து சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த 2020 வருடம் நம் அனைவருக்கும் மிகவும் மோசமானது தான் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.