சிறையில் இருந்து விடுதலையாக இருக்கும் சசிகலா 10 கோடி அபராதம் எப்படி செலுத்துவார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையாக இருப்பது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அவரது விடுதலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று கர்நாடக சிறைத் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் 10 கோடி ரூபாயை கெட்ட தவறினால் கூடுதலாக ஒரு வருடம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொது முடக்கத்தால் வெளியில் வராமல் இருந்த டிடிவி தினகரன் தனி விமானம் மூலம் கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் டெல்லி சென்று வந்துள்ளார். அவர் யாரை சந்திக்க சென்றார் என்ற கேள்வி வரத் தொடங்கியதும் பாஜகவின் இருக்கும் முக்கிய புள்ளிகளை சசிகலாவின் விடுதலை தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாஜக அரசியலை சசிகலாவின் விடுதலை மையமாகக் கொண்டு நடத்துகிறதா என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
ஒரு பக்கம் டிடிவி தினகரன் தரப்பில் சசிகலாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விரைந்து அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்துக் கோடியை செலுத்தாவிட்டால் விடுதலையாக முடியாது என்பதால் அதனை எப்படி செலுத்துவது என்று ஆலோசித்து வருகிறது. செலுத்தும் 10 கோடி ரூபாய் வருமான கணக்கையும் நீதிமன்றத்தில் நிச்சயமாக காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர்.
இதனால் அபராதம் செலுத்த வேண்டிய தொகையை அமமுகவினரிடம் வசூல் செய்து செலுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் தினகரனின் மகன் ஜெய் ஆனந்திடம் சசிகலா வேறு ஒரு யோசனை கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் மருதப்பா என்ற பெயரில் அறக்கட்டளை வைத்துள்ளார் அதன் மூலம் அபராதத் தொகையை செலுத்தலாம் என்பது சசிகலாவின் திட்டம் என கூறப்படுகிறது.