தூத்துக்குடி விமான நிலையம் உட்பட 7 விமான நிலையங்களில் ஓடு பாதைகளை நீட்டிப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் மிகப்பெரிய விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதற்கு நீளமான ஓடுபாதைகள் தேவைப்படும் என்ற காரணத்தால் அந்த விமான நிலையங்களின் ஓடுபாதைகள் மேலும் நீட்டித்து மேம்படுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் தூத்துக்குடி விமான நிலையம் உட்பட மேலும் 7 விமான நிலையங்களின் ஓடு பாதைகளை நீடிப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் திட்டம் தீட்டியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வருகின்ற 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்படுகிறது.
அதில் ஜம்மு காஷ்மீர் விமான நிலைய ஓடுபாதை 2,042 மீட்டரில் இருந்து 2,438 மீட்டராக நீட்டிக்கப்படுகின்றது. கோலாபூர் விமான நிலைய ஓடுபாதை 1,370 மீட்டரில் இருந்து 2,300 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. திருப்பதி விமான நிலைய ஓடுபாதை 2,286 மீட்டரில் இருந்து 3,810 மீட்டராக நீட்டிக்கப்படுகின்றது. இந்த விமான நிலையங்கள் மட்டுமின்றி மத்திய பிரதேசம், மேகாலயா, கடப்பா ஆகிய விமான நிலையங்களின் ஓடுபாதைகளும் நீட்டிக்கப்பட உள்ளது.