டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
ஐ.பி.எல் 37 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 37 பந்துகள் 69 ரன்கள் (5 சிக்ஸர், 6 பவுண்டரி) குவித்தார். மேலும் மந்தீப் சிங் 30 ரன்களும், ஹர்ப்ரீத் 20 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக லமிச்சானே 3 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 164 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவனும், பிருத்வி ஷாவும் களமிறங்கினர். பிருத்வி ஷா துரதிர்ஷ்டவசமாக 13 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு ஷ்ரேயஸ் ஐயரும், தவனும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர்.
அதன் பின் 14 வது ஓவரில் வில்ஜோன் பந்து வீச்சில் ஷிகர் தவன் 56 (41) ரன்கள் எடுத்த நிலையில் ஆர். அஷ்வின் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 6 ரன்னில் ஏமாற்றமளித்தார். இதையடுத்து வந்த கோலின் இங்ரம் அதிரடியாக விளையாடி 19 (9) ரன்களில் ஆட்டமிழக்க அதை தொடர்ந்து வந்த அக்சர் பட்டேல் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 58* (49) ரன்களிலும், ரூதர்பஃபோர்ட் 2* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக வில்ஜோன் 2 விக்கெட்டுகளும், முகமது சமி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.