அதிமுக செயற்குழுவில் OPS, EPS வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் கொஞ்ச நேரத்துக்கு முன்னதாகத் தான் நடந்து முடிந்தது. செயற்குழுவில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றாலும், நேரடி வாக்குவாதம் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில் நடைபெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி வாக்குவாதம் நடந்து இருக்கிறது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதன் பிறகு அணிகள் இரண்டாக இருந்த அணிகள் ஒன்றாக இணைந்த போது துணை முதலமைச்சராகவும், கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் செயல்படுவார் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆட்சி காலத்துக்கு மட்டும் தான் நான் துணை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் துணை முதலமைச்சராக செயல்பட முடியாது என்று அப்போதே தனது கருத்தை தெரிவித்ததாகவும், அது தொடர்பாக பின்னர் பேசி முடித்துக் கொள்ளலாம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்ததாக ஓபிஎஸ் இன்று தெரிவித்துள்ளார்.இனிமேல் திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் துணை முதலமைச்சராக என்னால தொடர முடியாது. அதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால் முதல்-அமைச்சர் ஆனார் என்று பெயரை குறிப்பிடாமல் நேரடியாகவே தெரிவித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கையில், நான் மட்டுமல்ல நீங்களும் தான் சசிகலாவால் முதலமைச்சராக ஆனீர்கள். அதனால் தான் முதலமைச்சராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டீர்கள் என்று விஷயத்தை எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவே ஓபிஎஸ் முன்பு பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். குடிமராமத்து பணிகள், கொரோனா பணிகள் என பல்வேறு பணிகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பில் நேரடியான ஒரு பதிலை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிகின்றது. செயற்குழு கூட்டம் முடிந்துள்ளதால் வருகின்ற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் ? என்று அறிவிக்கப்படும் என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.