ரத யாத்திரை குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என சத்யராஜின் மகள் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் விஷயங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருவிழா கொண்டாடுவது, பொதுக்கூட்டங்கள் கூட்டுவது உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆனால் இதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்குமாறு இந்து முன்னணி அமைப்பினர் சிலர் தமிழக அரசிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஒரு சில இடங்களில் விதிமுறையை மீறி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் ரத யாத்திரையை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியது.
இது குறித்து அறிந்த சத்யராஜின் மகள் திவ்யா ரத யாத்திரையை தற்போதைய சூழ்நிலையில் அனுமதிக்கக் கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன் வைத்த கோரிக்கை ஒன்றை வைத்தார். இவரது இந்தக் கோரிக்கைக்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என சில இந்து அமைப்புகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன் வைத்த கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று சத்யராஜ் மகள் திவ்யா உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை, மக்களின் உயிர் மீதும், உடல்நலத்தின் மீது இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.