Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் உடல் பருமனை சமாளிப்பது எப்படி…!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு முறைகளின் காரணமாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவரிக்கிறார் குழந்தை மருத்துவர்.

கொரோனா தொற்றின் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, செல்போனில் ஆன்லைன் கேம்ஸ், டிவி பார்ப்பது, நீண்ட நேரம் உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாள் முழுவதும் வீட்டிலேயே உள்ளதால், இத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இது சாதாரணம் தான் என பெற்றோர் நினைத்தாலும், நாளடைவில் குழந்தைகளால் சிறிய வேலைகளை கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உடல் பருமன் பிரச்னை பெரியவர்களுக்குதான் பாதிப்பு ஏற்படுத்தும் என்று எண்ணாமல், சிறு வயதிலே உடல் பருமனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்காக குழந்தை மருத்துவரான டாக்டர் சோனாலி நவலே பூரண்டரிவை அணுகினோம்.

உடல் பருமன் பிரச்னைகள் :

ஆரோக்கியமற்ற உணவு முறை, வாழ்க்கை முறை காரணமாக எந்த வயதினரும் உடல் பருமன் பிரச்னையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. சில நேரங்களில் மரபியல் அல்லது ஹார்மோன் பிரச்னைகளாகவும் இருக்கக்கூடும். குழந்தைகளின் எடை அதிகரிப்பது சோர்வு, தூக்கமின்மை, பதற்றம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது தவிர, சிலருக்கு சுவாசிப்பதில் சிரமமும் ஏற்படலாம். உடல் பருமன் அதிகரிப்பு சில சமயங்களில் நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பெரிய பிரச்னைகளை சந்திக்கவும் வழிவகுக்கும்.

உடல் பருமன் காரணங்கள்:

அன்றாட வாழ்க்கை முறை சரியில்லாதது

படிப்பதற்காக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது

சத்தான உணவகளுக்கு பதிலாக ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது

இனிப்பு பண்டங்கள் அதிகளவில் சாப்பிடுவது

தடுக்கும் முறை:

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மூலம் உடல் எடையை தேவையில்லாமல் அதிகரிப்பதை தடுக்க முடியும். அதேபோல், அவ்வப்போது யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்புகளை உடலில் இருந்து கரைக்க உதவுகிறது.

எனவே, குழந்தைகளை பத்திரமாக கவனித்துக் கொள்வதில் உணவு பழக்கவழக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆசைக்காக கேட்கும் அனைத்து இனிப்பு பண்டங்களையும் தினமும் வாங்கி கொடுக்காமல், உணவு முறையில் ஒரு திட்டமிடுதலை கொண்டு வாருங்கள்.

இந்த உடல் பருமன் பிரச்னையை பிற்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று சாதாரணமாக விட்டுவிட்டால், 40 வயதிற்கு மேல் தேவையில்லாத நோய்களை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்படும்.

Categories

Tech |