அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய அரசு மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கடலூர் தலைமை அஞ்சலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து வேளாண்மை சட்டத்திற்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அதிமுக அரசு மோடிக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளது. எனவே அவர்கள் மக்களை ஏய்க்கிற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இது அதிமுகவின் இரட்டை வேடம் என மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார்.