தமிழகத்தில் முதல்வராக ஓபிஎஸ் – இபிஎஸ் தேர்வானத்தில் சசிகலா பங்கு குறித்து அதிமுக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அதிமுகவின் செயற்குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் விவாதம் நீண்ட நேரமாக நடைபெற்றது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே நேரடி விவாதங்களும் அனல் பறந்துள்ளன.
துணை முதல்வராக இருக்க கூடிய ஓ பன்னீர்செல்வம் இந்த ஆட்சி காலத்தில் மட்டுமே நான் துணை முதல்வர் என்றும், மீண்டும் என்னால் துணை முதல்வராக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நான் ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்ட முதல்வராக இருந்துள்ளேன் என்றும், நீங்கள் சசிகலாவால் அடையாளப்படுத்தப்பட்ட முதல்வர் என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்தை முன்வைத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு நேரடியாக பதிலளித்துள்ளார். அப்போது நீங்களும் சசிகலாவால் தான் முதல்வரானீர்கள், நானும் சசிகலாவால் தான் முதல்வர் ஆனேன் என்று தெரிவித்துள்ளார்கள். இது குறித்து ஏராளமான கருத்துக்களை அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது உண்மை தான் என பலரும் சொல்கிறார்கள்.
முதன்முதலில் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக வேண்டும் என்று பேச்சு வரும்போது டிடிவி தினகரன், சசிகலா தான் ஜெயலலிதா அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். அப்போது ஜெயலலிதாவை சுப்ரீம் கோர்ட்டு தகுதி நீக்கம் செய்து இருந்தது. எனவே ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். இதுதான் அன்றைய வரலாறு என்றும், அதில் சசிகலாவின் பங்கு இருந்தது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்பின் நிகழ்ந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்கப்பட்டபோது முழுக்க முழுக்க சசிகலாவின் பங்களிப்பாக தான் இருந்தது. எனவே ஜெயலலிதாவால் தான் நான் முதலமைச்சர் ஆனேன் என்று கண்டிப்பாக ஓபிஎஸ் கூறமுடியாது. ஓபிஎஸ் முதல்வர் ஆனதில் சசிகலாவின் பங்கு இருந்தது, அதை எவரும் மறுக்க முடியாது, அதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.