அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு இருந்து வந்தது.காலை முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆளும் அதிமுகவின் அரசியல் நகர்வு இருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து அதிமுகவில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தொண்டர்கள் ஏமாற்றம்:
ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றும் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருப்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவாகிவிடும், தேர்தல் பணிகளை உற்சாகமாக முன்னெடுக்கலாம் என்று ஆவலாக காத்திருந்த அதிமுக தொண்டர்களுக்கு செயற்குழு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
OPS – EPS சேர்ந்து அறிவிப்பார்கள்:
அதே நேரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது செயற்குழு எடுத்த முடிவு குறித்து இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி அறிவித்தது. செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளரிடம் பேசிய கே.பி முனுசாமி அதிமுக கூட்டணியின் வேட்பாளர் யார் ? என்பதை அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவெடுப்பார்கள் என்று கேபி முனுசாமி தெரிவித்தார். அவர் தெரிவிக்கும் போது, தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்க கூடிய இந்த நேரத்தில் அதிமுக தலைமையில் இயங்கக்க்கூடிய கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பதை முதல்வர், துணை முதல்வர் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
பாஜக முடிவு செய்யுமா ?
இதில் கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் என்ற வார்த்தை கூட்டணி கட்சிகளின் ஒப்புதலை பெற்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்பதை காட்டுகிறது. பெரும்பாலும் அதிமுகவின் கூட்டணியில் உள்ள பெரிய கட்சியாக இருப்பது பாஜக .எனவே முதல்வர் யார் ? என்பதை பாஜக தலைமை, அதுவும் அகில இந்திய டெல்லி தலைமை முடிவு செய்ம் என்றும், அதற்காகத்தான் ஏழு நாட்கள் காலஅவகாசம் என்றும் சொல்லப்படுகிறது.
அதிமுகவால் முடிவு எடுக்க முடியும் :
அதிமுகவின் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். செயற்குழுவில் தான் ஒரு முடிவை எடுத்து, அதை பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்ற முடியும் என்பது காலகாலமாக அதிமுகவில் நடைமுறையாக இருந்த நிலையில் நேற்றைய செயற்குழுவில் முதல்வர் குறித்த முடிவை எடுக்க முடியும். இருந்தும் ஏழாம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது பாஜகவில் இருந்து ஏதேனும் சமிக்கைகள் வர வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. எனவே அதிமுக வேட்பாளர் யார் என்று அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.