இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ஐந்து குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா பல்வேறு தீவுக்கூட்டங்களில் கொண்ட நாடாகத் திகழ்கிறது. அங்கு நிலநடுக்கம், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழும். அந்த இயற்கை பேரிடர்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களை மிக கடுமையாக பாதித்து செல்லும். இந்த நிலையில் அந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான போர்னியோ தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது.அதனால் அப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக போர்னியோ தீவின் தரகன் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின. அதுமட்டுமன்றி வீடுகளில் இருந்த பல மக்களும் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு 4 பேரின் உடல்களை மீட்டனர்.இருந்தாலும் நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் சிலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்ற அச்சத்தால் மீட்பு பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.