பேய் விரட்டுவதாக கூறி 3 வயது குழந்தையை பிரம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரவீன்-சியாமளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பூர்விகா என்ற மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பூர்விகா சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவர்களது பகுதியில் இருந்த சவுடாம்மன் கோவில் பூசாரியான ராகேஷ் என்பவரிடம் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர்.
ராகேஷ் குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என்று கூறி பூஜை செய்து விரட்டி விடலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளார். இதனால் குழந்தையின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அச்சமயம் குழந்தையை பிடித்த பேயை விரட்டுவதாக கூறி 3 வயது குழந்தை என்றும் பாராமல் பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது திடீரென குழந்தை மயங்கி விழுந்தது . அதன்பிறகு ராகேஷ் பூர்விகாவை அவள் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு அவ்விடம் விட்டு புறப்பட்டு விட்டார்.
ஆனால் வெகுநேரமாகியும் குழந்தைக்கு மயக்கம் தெளியவில்லை. இதனால் பயந்து போன பெற்றோர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றனர். அங்கு பூர்விகாவை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பூசாரி ராகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.