மாநகராட்சி அழைப்பிதழ் ஒன்றில் ஓபிஎஸ் பெயர் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முதல் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். இந்த வாக்குவாதம் தொடங்கியது முதலே இபிஎஸ் ஆதரவாளர்கள் என ஒரு குழுவும், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிந்து, பல்வேறுவிதமான போஸ்டர்களையும், கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அழைப்பிதழ் ஒன்றால், அதிமுக கட்சிக்குள் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னையில் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்க உள்ள திட்டத்துக்கான அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இடம் பெறவில்லை என்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், மாநகராட்சி அழைப்பிதழில் பெயர் இல்லை. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நேற்று நடந்த கடும் வாக்குவாதமே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.