உயிரிழந்த பாட்டியுடன் சிறுவர்கள் இருவர் ஒரு வாரம் தனியாக வீட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த கோனி டெய்லர் என்பவர் 76 வயதிலும் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் இருவரை தத்தெடுத்து பராமரித்து வந்தார். மிகுந்த பாசத்துடன் குழந்தைகளை கோனி டெய்லர் கவனித்து வந்தார். இந்நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் டெய்லர் திடீரென உயிரிழந்தார். இதனால் சிறுவர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி உள்ளனர்.
அதோடு பாட்டியின் கைபேசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை. இதனால் உதவி கேட்கவும் வழியின்றி ஒருவாரம் பாட்டியின் உயிரற்ற சடலத்துடன் வாழ்ந்து வந்தனர். இதனிடையே சிறுவர்கள் இருவரும் பள்ளிக்கு ஒருவாரமாக வரவில்லை என்பதால் அவர்களின் ஆசிரியர் எதனால் வரவில்லை என்று விசாரிக்க தொடங்கியுள்ளார். அப்போது அவருக்கு டெய்லர் உயிர் இழந்ததும் உதவிக்கு ஆள் இல்லாமல் சிறுவர்கள் பாட்டியின் சடலத்துடன் ஒரு வாரமாக இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுவர்கள் இருவரும் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர். டெய்லரின் பிள்ளைகள் அந்த சிறுவர்களை தங்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பள்ளி வராத சிறுவர்கள் மீது அக்கறை கொண்டு விசாரித்த ஆசிரியருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். அவரது செயலால் தான் ஒரு வாரம் கழித்து இந்த சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது.