Categories
Uncategorized தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் தலித் பெண் உயிரிழப்பு – பா.ஜ.க.-வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்…!!

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் நேற்று நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஹத்ரஸ் மாவட்டம் சன்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் கடந்த 14ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பெண் வெளியில் சொல்லிவிடுவார் என கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கினார்கள். இதில் நாக்கு துண்டிக்கப்பட்ட அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்குங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதனிடையே மருத்துவமனையில் இருந்து ஹத்ரஸ் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இளம் பெண்ணின் உடலுக்கு நள்ளிரவே இறுதிச் சடங்குகளை செய்ய உத்தர பிரதேச போலீசார் வலியுறுத்தியதை அடுத்து, நள்ளிரவில் இளம்பெண்ணின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்திரபிரதேசத்தின் முதலமைச்சர் திரு யோகி ஆதித்ய தலைமையிலான பாஜக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |