பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களில் 17 பேர் உயிர் இழந்து விட்டதால்,மீதமுள்ள 32 பேர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருக்கின்ற சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.அதன் பிறகு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து,செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரணை செய்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய தீர்ப்பில் பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதுள்ள குற்றங்களை சரியான ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்க தவறி விட்டதால் 32 பேரும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.தீர்ப்பு வழங்கப்படுவதால் நீதிமன்ற வளாகம் மற்றும் நாடு முழுவதிலும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி அயோத்தியில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.