பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை கேட்டபோது டெல்லி போலீஸ் கன்னத்தில் அறைந்து, உதைத்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி ஒருவர் உயர்ஜாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதில் அந்த பெண்ணிற்கு முதுகு தண்டுவடம் நொறுங்கியது மட்டுமல்லாமல் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அப்பெண்ணுக்கு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ தத் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் எங்கு உள்ளது என்று விசாரணை செய்தார், அப்போது டெல்லி காவல்துறை அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கினர். இதுபற்றி அவர் கூறும்போது, “அவர்கள் என் சட்டை காலரைப் பிடித்து இழுத்து ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள். அங்கே இருந்த அதிகாரிகளால் நான் பலமாக தாக்கப்பட்டேன். அவர்கள் என் கன்னத்தில் அறைந்து அடித்து உதைத்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆகிய எனக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இதுவாக இருந்தால், சாதாரண மக்களின் நிலையைப் பற்றி சிந்தியுங்கள்”என்று அவர் கூறியுள்ளார்.