கொரோனா பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சாலையில் சிதறிக் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கொரோனா பரிசோதனைகாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த மருத்துவப் பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்து உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் சாலையில் கிடந்த பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர்.
சேலத்தை பொறுத்தவரை ஆத்தூர் சேலம் என்று இரண்டும் சுகாதார மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பகுதியில் முகாம் அமைத்து கோரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆம்புலன்ஸ் மூலமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் வாயிலாக தலைவாசல் பகுதியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு வந்தபோது ஊழியர் சிதற விட்டதாக கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள் இனி இதுபோன்ற தவறு நடக்காமல் இருப்பதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறியுள்ளனர். ஆத்தூர் சுகாதார மாவட்டத் துணை இயக்குனர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.