அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என்றும் மூன்று நாட்கள் 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு மீதமுள்ள மூன்று நாட்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்புகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகுப்பிற்கு வருகைப்பதிவேடு கிடையாது என்றும் வீட்டின் அருகே இருக்கும் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருகின்ற 5ஆம் தேதி முதல் புதுச்சேரி காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும். ஆனால் எட்டாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் 5 முதல் 7 ஆம் தேதி வரை மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும் அதோடு இருக்கைகள் தனிமனித இடைவெளியுடன் இருக்கும்படி மாற்றியமைக்கப்படும்
மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். 9, 10. 11, 12 ஆகிய வகுப்பில் இருக்கும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பள்ளிக்கு நேரடியாக வரலாம் என்று அறிவுறுத்தி உள்ளோம். வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளி நடந்து வந்தது. தற்போது ஆறு நாட்களாக நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பத்தாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் காலை 10 மணி முதல் 1 மணி வரை பாடம் நடத்தப்படும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் 9-ஆம் வகுப்புக்கும் 11 ஆம் வகுப்புக்கும் காலை 10 மணி முதல் 1 மணி வரை பாடங்கள் நடத்தப்படும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும். இதற்கென்று விண்ணப்ப படிவம் ஒன்று வழங்கப்படும்.