கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிகிச்சைக்காக தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.வெள்ளை மாளிகையில் டிரம்புக்கு நேற்று திடீரென லேசான அறிகுறிகளுடன் காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் தொடர்ந்து நீடித்து கொண்டிருப்பதால் மேல் சிகிச்சை பெறுவதற்காக அலபாமா மாகாணத்தில் இருக்கின்ற வால்டர் ரெட் என்ற தேசிய ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு சென்றடைந்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரின் அதிகாரங்கள் தொடர்ந்து அவரிடம் மட்டுமே நீடிக்கும் என்றும்,அதிபர் பணிகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வருவார் எனவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.