Categories
கல்வி நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” சிக்னல் தேடி காட்டிற்கு செல்ல மாணவர்கள்…. விலங்குகள் தாக்கும் அபாயம்…. பெற்றோர்கள் கோரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக  மாணவர்கள் வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கின்றது.

கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்போன் சிக்னல் மட்டுமே கிடைக்கின்றது. பிற தனியார் செல்போன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை அதனால் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியாமல் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பல்வேறு செல்போன் சிக்னல்களும் நிறைவாக கிடைப்பதில்லை. சிக்னல் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சிக்னல் கிடைக்கும் இடங்களைத் தேடிச் சென்று அங்கேயே இருந்து ஆன்லைன் வகுப்புகளில்  பங்கேற்கின்றனர்.இதில் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சியிலும் செல்போன் சிக்னல்கள் முடங்கி இருப்பதால் அப்பகுதி மாணவர்கள் வனப்பகுதியில் உள்ள மேடான இடத்திற்குச் சென்று ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூர் வயல் பகுதியிலும் செல்போன் சிக்னல்கள் கிடைப்பதில்லை. அதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதிக்குள் சென்று ஆன்லைன் வகுப்பு பங்கேற்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் எந்த நேரத்திலும் வனவிலங்குகளால் அவர்களுக்கு அபாயம் ஏற்படும். இதனால் மாணவர்களின் பெற்றோர் கூறியிருப்பதாவது,ஒவ்வொரு நாளும் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் கற்றுத் தரப்படுகிறது.

இதை மாணவர்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் உள்ளது. ஆனால் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் மாணவர்கள் பாடங்களை தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் சிக்னல்கள் கிடைக்கும் இடங்களைத் தேடி மாணவர்கள் சென்று படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் மேடான பகுதிக்கு சென்று படிப்பதால் வனவிலங்குகள் தாக்கி விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. ஆதலால் கூடலூர் பகுதியில் செல்போன்  சிக்னல்கள்  சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  கூறினார்கள்.

Categories

Tech |