உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹதராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹத்ராசியில் 144 தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி கீழே தள்ளி விட்டு பின்னர் கைது செய்தனர். இந்நிலையில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக திரு ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று மீண்டும் சென்றது.
டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் போலீஸாரின் கெடுபடிக்கு பின்னர் திரு ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹத்ராசில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து கொல்கட்டாவில் மேற்கு வங்காள முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பிர்லா கோளரங்கம் முதல் காந்தி சிலை வரை நடைபெற்ற இந்தக் கண்டனப் பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.