கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ள சிபிஐ கணக்கில் வராத 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளது.
வரிஏய்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புள்ள பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு டிகே. சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியது. அப்போது நடத்திய சோதனையில் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் சிபிஐ-யிடம் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் விசாரித்து வந்த சிபிஐ காலை 6 மணி முதல் சதாசிவ நகரில் உள்ள சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வருகிறது.
பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பையில் டிகே. சிவகுமாரின் உறவினர்கள் இல்லங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். டிகே. சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றுவரும் சிபிஐ சோதனைக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டிகே சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் பிகே. சுரேஷ் ஆகியோர் இல்லங்களில் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.