மதுரையில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் கும்பலை கைது செய்ய கோரி வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திடீர் நகரில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள ரவுடிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். ரவுடிகள் அங்கு வந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரவுடி கும்பலை கைது செய்யக்கோரி பெரியார் பேருந்து நிலையம் அருகே வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திடீர் நகரில் வாகனங்கள் சூறையாடப் படுவது அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றி பலமுறை புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு. சேதமடைந்த வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.