உப்புக்கோட்டையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகில் உள்ள டொம்புச்சேரி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை முறையான அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக தகவல் பரவியது.இதற்க்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலையில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கூடாது என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மதுக்கடைக்கு எதிரான எழுதிய வாசகங்களை கையில் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மக்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.