அதிமுகவில் நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலைமைச்சர் ஓ .பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.
முதலில் அமைச்சர்கள் காமராஜ், சி.வி சண்முகம், கே.பி அன்பழகன் ஆகியோர் முதல்வர் இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து இன்று மாலை அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் முதல்வரின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை மேற்கொண்டனர்.
மற்றொருபுறம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஜெயகுமார்,ஆர்.பி உதயகுமார் மற்றும் தங்கமணி முதலானோர் இன்று காலை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துடன் இரண்டரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்தினர். மறுபடியும் அமைச்சர் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தியது.நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர்களின் அடுத்தடுத்த ரகசிய ஆலோசனைகள் அதிமுகவில் நாளை என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.