உலகையே ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை விட்டு வைக்காததை போல அதிபர் டிரம்ப்பையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். வெறும் மூன்று நாட்களே சிகிச்சை பெற்று கடந்த திங்கள்கிழமை வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் உடனடியாக ஆதரவாளர்களுக்கு முகம் காட்டும் வகையில் வெள்ளை மாளிகையில் இருந்தபடி கையசைத்தார்.
மேலும் கட்டை விரலை உயர்த்தி ஆதரவாளர்களையும், தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ப் பால்கனியில் நின்றுகொண்டிருந்த போது மாஸ்க் அணியாமல் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது வருகையை உறுதி செய்யும் வகையில் முகம் காட்டினார். அப்போது அவருக்கு அதிகமாக மூச்சு வாங்கியது. மூச்சுவிடாமல் சிரமப்பட்டார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
70 வயதை கடந்த அவர் மூன்று நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்து கொண்டு, தான் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதாக கூறி வெள்ளை மாளிகை வந்தது கேள்வியை எழுப்பியுள்ளது. அதிபர் தேர்தல் நெருங்குவதால் பிரச்சாரம் ஒன்றை மேற்கொள்வதற்காக உடனே திரும்பி விட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரம்ப்பின் இந்த நிலையை கண்டு ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்